Wednesday, April 29, 2009

தேர்தல் - சில கனவுகள் ……(எதைப்) பற்றியும் பற்றாமலும் .... (29th April '09)



தமிழ் நாட்டில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கத் துவங்கி விட்டது என்று நினைக்கிறேன். இங்கு மும்பையில் அப்படி ஒன்றும் விசேடமாக இல்லை. இங்கு நாளை தேர்தல் (April 30) தினம். நீண்ட வார-இறுதி தரும் களிப்பில் மும்பைகர்கள் பயணத் திட்டங்கள் எப்பவோ தீட்டி விட்டார்கள். நானும் தான். ஆயினும் வாக்களித்து விட்டு செல்வதாகவே உத்தேசம். தேர்தல் நேரத்திலாவது இட்லி வடை/லக்கி லுக் போன்ற எப்போதும் அரசியல் சார்புள்ளவர்கள் பதிவு படிப்பது சில விஷயங்களைத் தரும்: பொதுவாக நல்ல பொழுதுபோக்கு; அவரவர் சார்பு நிலைகேற்ற சாமர்த்திய வாதங்கள்; உங்களுக்கு ஒவ்வாத நிலையென்றால் நிச்சயம் இரத்தக் கொதிப்பு போன்றவை. சில சமயம் செம்ம காமெடியாகவும் இருக்கும். எனக்குத் தெரிந்து இருவருமே தமிழகத்தின் நாற்பதில் (புதுச்சேரி சேர்த்து) முப்பது-பத்து என்று சொல்லிக்கொள்கிறார்கள். One of us is crying; One of us is lying என்னும் ABBA பாடல் நினைவுக்கு வருகிறது.

இந்த வாரத்தின் மிகப் பெரிய ஆச்சரியங்கள் சில:

அம்மாவின் 'ஈழம்' பேச்சு

ரோசா வசந்தின் 'தி.மு.க./காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை' என்ற பதிவு

முதலில் ஜெ. இவர் தடாலடியாக 'எதையும்' செய்யக் கூடியவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீரப்பன், காஞ்சி மடம் என்று பல்லாண்டு, நூற்றாண்டு பிம்பங்களைப் பொடியாக்கும் நெஞ்சுறுதி அல்லது ஆணவம் பிடித்தவர். அதனால் வெறும் தேர்தல் ஸ்டண்ட் என்று மட்டும் இவரை அலட்சியம் செய்ய முடியாது. எனக்கு ஒரே பயம் தாலிபான்கள் போல இவரையும் அணு குண்டுப் பொத்தான்கள் அருகில் விடவே கூடாது. Why not என்று சோதிக்கும் குணாதிசயம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. வைகோ இன்னமும் பிறழ்வு நிலைக்குத் தள்ளப்படாமல் இருந்தால் அது பெரிய விதயம்.

ஆனாலும் அதிர்ச்சி கொடுத்து, தேர்தல் களத்தை - issueless election என்றிருந்த நிலையை - சூடாக்கிய பெருமை இவருக்குப் போய் சேரவேண்டும். இதனை எதிர்க்க அந்த பெரியவர் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தது ஒரு black humour. ஆனால், இந்தத் தருணத்திலாவது அவர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்தியிருக்கலாம். ஏன் என்கிறீர்களா? அவர்தானே First among equals? மேலும் பின்னாட்களில் ஒரு குழாயடிச் சண்டை உருவாவதைத் தவிர்க்கலாம். இவை தவிர, எனக்கு ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். No jokes. தமிழ் நாட்டில் விவேகம், பொறுமை, எதிராளியிடமும் கண்ணியம், வெறும் அனல் பேச்சு-வாய் சவுடால்கள் விடாமல் இருப்பது என்பது பெரிய தலைவர்களில் அவரிடம் மட்டுமே இருப்பதாக என் எண்ணம். எனக்கு அரசியல் பற்றி அருகில் சென்று அவதானித்த அனுபவம் சிறிதும் இல்லை. தூரத்து, தொலைகாட்சி/பத்திரிகைப் பார்வைகள் அவ்வளவே. ஆதலால் நான் சொல்வது முற்றிலும் என் அளவில் மட்டுமே. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமாவது எனக்கும் ஏதாவது உளர நிச்சயம் உரிமை இருக்கு. அதனால நானும் சொல்லுவேன்.

அடுத்த மெல்லிய ஆச்சரியம் ரோசா வசந்தின் பதிவு. அவர் ஜெ.கூட்டணியை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு அவர் முன்வைத்த வாதம் இது:

"தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.

ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்!”

என்று போகிறது இவர் பதிவு. நடை பெறப்போவது நாடளுமன்றத் தேர்தல். ஈழம் மட்டுந்தான் இந்தியாவை எதிர்நோக்கியுள்ள பிரச்சனையா? இல்லை தமிழனாக மட்டுமே (இந்தியன் என்னும் கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்) சிந்திப்பேன்; மற்றதைப் பற்றி (இதில் தமிழனைப் அன்றாடம் பாதிக்கும் மற்ற விஷயங்களும் அடக்கம்) அக்கறை இல்லை என்ற நிலை சரியா என்று எனக்குத் தெரியவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக பா.ஜ.க. வருவது கடினம். மூன்றாவது அணி என்னும் உருவம் சரியாகப் புலப்படாத வஸ்து வரலாம். தினசரி ஆட்சியே பெரிய விடயமாகிவிடும் சூழலில், பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம், அயல் நாட்டுக் கொள்கை இவற்றுக்கான குறைந்தபட்ச கொள்கைகள் மற்றும் அவற்றை அமலுக்குக் கொண்டுவருவது போன்றவை நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை. ஈழம் பற்றி அத்தகைய புது அரசு ஏதாவது முடிவு எடுக்கும் என்றோ, அப்படியே எடுத்தாலும் சிறி லங்கா அரசு அத்தகைய மைனாரிட்டி அரசுக்கு மரியாதை தரும் என்றோ எதிர்பார்க்க முடியாது. இதை எல்லாம் யோசித்தால் ... மண்ட காயுது பாஸ்.

தமிழரல்லாத மற்றவர்களுக்கு மூன்றாம் அணி பற்றிய பயம் மட்டுமே உள்ளதால், ஒழிந்து போகிறது என்று காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ.க.வுக்கோ வாக்களிக்கலாம். தமிழர்கள் பாடு உண்மையில் choice between Devil and Deep Sea; Frying Pan and Fire; Rock and a Hard place etc. Or DMK and ADMK.

தமிழ் நாட்டு வாக்காளர்களைப் பொறுத்தவரை கட்சி சார்பு நிலை உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு தர்ம சங்கடமும் இல்லை. அது இல்லாதவர்கள் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்.

இங்கு பங்கு சந்தை பற்றி மட்டும் (கூடவே தங்கள் வங்கி கணக்கில் வளர்ச்சி) எப்போதும் கவலைப்படும் கூட்டம் 'இந்த மூன்றாவது அணியிடம் கெஞ்சுவதை விட, காங்கிரசும், பா.ஜ.க.வும் தேர்தலுக்குப் பின் கூட்டு சேர்வது சாலச் சிறந்தது என்று கருதுகிறது. அவரவர் கவலை அவரவருக்கு.

எனக்கும் பகற்கனவு காண்பது மிகப் பிடிக்கும். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, திமுகவும் அதிமுகவும் ஒரே அணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் நாற்பதும் கிடைத்திருக்கும். எந்த ஆட்சி அமைந்தாலும், 'இதோ பார், முதலில் ஈழம் பற்றி ஒரு உடனடி முடிவெடு. அப்புறம் தான் ஆதரவு' என்று சொல்லியிருக்கலாம். இரு கழகங்களும் வாழ்வில் ஒரு முறையாவது தமிழருக்காக செயல் பட்டதற்கு மனசாட்சியுடன் இருக்கலாம். ஒரு இனத்தைக் காப்பாற்றிய செயலாகவும் இருந்திருக்கும். If only wishes were horses ........ பதிவு ரொம்ப சீரியசாக தோன்றுவதால் கொஞ்சம் மனதை இலேசாக்க:

கனவு சீன் 1:

ஸ்டாலின் நேர போயஸ் தோட்டத்துக்குப் பூங்கொத்துகளுடன் போகிறார். அவரை வாசலில் வந்து அம்மா வரவேற்கிறார். தோட்டத்தில் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கும் அய்யாவும், வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த வைக்கோவும், கூர் மழுங்கிப் போன அரிவாளை சாணை தீட்டிக்கொண்டிருக்கும் தா.பாண்டியனும் அம்மா பக்கத்தில் வந்து நின்று கொண்டு தளபதியைப் பார்த்து புன்முறுவல்/கண்ணடித்தல் போன்ற காரியங்கள் செய்தல். ஸ்டாலினுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் திருமா ஒரு ஒற்றை ரோஜாவை அம்மாவிடம் கொடுக்க, அவர் அதில் ஆளுக்கு ஒரு இதழை மற்றவருக்குப் பிய்த்துக் கொடுத்தல்.

கனவு சீன் 2

அங்கிருந்து எல்லோரும் ஒரே வேனில் அறிவாலயம் நோக்கிச் செல்ல வேண்டும். வாசலில் பேராசிரியர்/துரைமுருகன் வந்து வரவேற்று, கூட்டம் நடக்க வேண்டிய பெரிய ஹாலுக்குச் செல்லுதல். அங்கு நடுநாயகமாக கலைஞர் அமர்ந்திருப்பார். செல்வி தன் கோஷ்டியுடன் முன்னேறி அருகில் சென்றதும், அவர் கைகளைப் பற்றி, உச்சி முகர்தல். எல்லோருக்கும் கண்கள் கட்டாயம் பனிக்கும். இதயமும் இனிக்கும்.

பேச்சு வார்த்தை முடிவில், அறிவிப்பு பின் வருமாறு:

மொத்த நாற்பது இடங்களில் திமுக கூட்டணி (காங்கிரஸ் இல்லை) இருபது இடங்களிலும், மீதி இருபது இடங்களில் அம்மாவின் கூட்டணியும் போட்டியிடும். எதிர் கூட்டணி போட்டியிடும் இடங்களில், தங்கள் கூட்டணி வேட்பாளர்கள் தேர்தலிலிருந்து விலகிக் கொள்வார்கள். நாற்பது இடங்களிலும், இரு தரப்பும், ஈழத்தை முன்வைத்து வாக்கு கேட்கும். இது ஈழம் மலர்வதற்கான ஒரு அரிய ஒற்றுமை. மற்றபடி கொள்கை(?) வேறுபாடுகள் தொடரும். இரு கட்சிகளை இணைப்பது போன்ற பேச்சுக்கே இடமில்லை.

தேர்தல் முடிவுகள் சாதகமாகி, நாற்பது இடங்களையும் இந்த பெரும் 'தமிழர் கூட்டணி' வென்றால், டில்லியில் யார் ஆட்சி அமைந்தாலும், இந்த நாற்பது இடங்களின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். ஒரே குழுவாகவே இது செயல்படும். ஆதரவு தருவதற்கு முன் நிபந்தனையாக இந்த விதயங்கள் கோரப்படும்:

1. முதலில் போர் முற்றிலும் நிறுத்தப் பட வேண்டும்
2. அயல்நாட்டுத் துறை, பாதுகாப்புத் துறை, முடிந்தால் உள்துறை இவை
எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது.
3. தமிழ் ஈழம் மலர, மத்திய அரசு எல்லா முயற்சிகளும் செய்ய வேண்டும்.
4. அது சிக்கலாகும் பட்சத்தில், குறைந்த பட்சம் தனி ஆட்சி உரிமையாவது தமிழருக்குப் பெற்று தர வேண்டும்.

கனவு சீன் 3

ராஜ பக்ஷே (எல்லோரும் மனம் மாறி திருந்தும் போது, அவரையும் மாத்திடுவோம்) வேற வழியில்லாமல், முழு சுந்தந்திரம் பத்து வருடங்களில். அது வரை ஈழத்திற்கு சுயாட்சி என்று ஒரு திட்டத்திற்கு ஒப்புக்கொள்வார். அதற்குள் புலிகளின் மீதான தடை நீக்கப்பட்டு, அந்த இயக்கமும் வேறு பெயரில் ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் இயங்கும்.

கனவின் கடைசிக் காட்சி

நார்வே, மன்னிக்கவும், இலங்கை என்றாலே நார்வே ஞாபகம் விருகிறது. ஸ்வீடன் நாடு நோபெல் அமைப்பு, உலக சமாதானப் பரிசை கலைஞர், அம்மா மற்றும் ராஜ பக்ஷே மூவருக்கும் பகிர்ந்து அளிப்பதாக அறிவிப்பு வருகிறது.


தமிழகத்தின் தவிர்க்க முடியா இந்த இரு ஆளுமைகள் நினைத்தால்......

ஏதோ கூச்சல் கேட்கிறதே! என்னது?

மைனாரிட்டி திமுக அரசு ஒரு மக்கள் விரோத அரசு. உடனே டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்

அம்மையாரின் போலி ஈழ கோஷங்களை நம்பாதீர். உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர்

அடப் போங்கையா... போயி புள்ள குட்டிங்களப் படிக்க வெய்யுங்க. ஈழ மக்களே! தயவு செய்து தமிழகத்திடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

Monday, April 27, 2009

கொல்லன்



உலைக்களமும் இரும்புத் தாதுவும்
கைவசமான பூரிப்பில்
கொல்லன் என அறிவித்துக்கொண்டேன்
உருக்கும் வேலையை
தீயிடம் விட்டுவிட்டாலும்
வார்க்கும் கலை வசப்படவில்லை
பூஜ்ய வளையங்கள்
செய்ய மட்டும் அறிந்ததால்
மாளிகையின் வெளிக்கதவை
மறுதலித்துவிட்டேன்
நீள்வட்ட வளையங்களை
வீதியில் வீசிவிட்டேன்
என் உலைக்களத்தில்
நானே ஈ ஆனேன்
நுரை தள்ளி வீழ்ந்தவனுக்கு
சிறுமியொருத்தி கொடுத்தாள்
வீதியில் புழுதிபட்ட
முட்டை வளையத்தை;
சவுக்குக் கம்பங்களை
அருகருகில் வைப்பதற்கு
சங்கிலி வளையங்கள்
செய்யக் கற்றேன்
மாளிகை எசமானின்
கரங்களைக் கைதுசெய்த
விலங்குச் சங்கிலிகள்
என்னுலையில் உருவானதில்
கொல்லன் என்று
அறியப்படுகிறேன்
இப்போதெல்லாம்


(உயிரோசை 16.02.09 மின்னிதழில் பிரசுரமானது)

Monday, April 20, 2009

சாவின் விளிம்பில்? (எதை) பற்றியும் பற்றாமலும் .... (20th April '09)



பெங்களூர் அருகில் 'மேகே தாட்டு' என்று ஒரு இடம். தமிழில் சுமாராக 'ஆடு தாண்டும்' இடம் என்று மொழி பெயர்த்துக் கொள்ளலாம். நாங்க பெங்களூரில் இருந்தபோது இந்த இடத்துக்கு எங்க காலனியில் இருந்த சுமார் முப்பது குடும்பங்களுடன் பிக்னிக் போனோம். இரண்டு பக்கமும் கூர்மையான பாறைகள். நடுவில், கீழே ஆறு. காவிரி தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், இரண்டு பக்க பாறைகளும் 'ஹலோ' சொல்லி அருகில் வரும் தூரம். அந்த இடத்தை நம்மால் தாண்ட முடியாது என்றாலும் ஆடு தாண்டிச் செல்லும் என்பது தல வரலாறு.

அதுக்கென்ன இப்போ என்று அவசரப் படாதீர்கள். அந்த இடத்துக்கு கொஞ்சம் முன்னாடி போனா, இரு சிறு ஓடைகள் சங்கமிக்கும் இடம் வரும். இதுவா காவேரி என்று நம்ப முடியாமல் இருக்கும். முழங்கால் அளவு தண்ணி. இடுப்பு நனைய படுத்துக் கொள்ள வேண்டும். அங்க எல்லாரும் ..வேற என்ன .. நல்லா சாப்பிட்டு, கொஞ்ச நேரம் மர நிழலில் சீட்டாடி, அழகான பெண்களைக் கண்களால் துரத்தி என்று … சம்பிரதாயமான சுற்றுலா.

அப்போ சின்ன குழந்தைகள் தண்ணில பந்து விளையாடிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு ஒரு பையன் பந்தை கொஞ்சம் பலமா வீசி எறிந்ததில் பந்து ஓடை நடுவில் இருந்த பாறைக்கு அந்த பக்கம் விழுந்து விட்டது. ரொம்ப சின்ன பையன் என்பதால், 'அங்கிள், (என்னதான் யூத் என்றாலும், சின்ன பையனுக்கு அங்கிள் தான்) அந்தப் பந்தை எடுத்துக் கொடுங்க' என்று கெஞ்சினான். ஒரு மூன்று நான்கு ஜோடிக் கண்கள் நம்மளப் பார்ப்பதாகப் பட்சி சொன்னதால், மற்ற போட்டியாளர்கள் விரையும் முன், நான் ஓடினேன். குதிகால் தண்ணீரில் கால் நனைத்து, இலாவகமாகப் பாறையில் ஏறி, ரொம்பவே ஸ்டைலாக மறு பக்கம் குதித்தேன்.

பந்தை எடுத்து மறுபக்கம் வீசி விட்டேன். அப்புறம், ஏதோ வித்தியாசமா இருந்தது. தரையே தட்டுப் படவில்லை. பார்த்தால், கீழே கீழே போய்க் கொண்டு இருக்கேன். என்னோட நினைவுல ஒரு இருபது-முப்பது அடி கீழே போயிட்டேன். தரை இன்னும் வரல. முதன் முறையாக பயம். அதுவும் மரண பயம். நல்ல வேளையா நீரின் வேகம் அவ்வளவு இல்ல. ஒரு தருணத்தில் கீழே போவது நின்றது. கொஞ்சம் சிறு நீச்சல் முயற்சியில் தண்ணீர் என்னை மேலே எழுப்பியது. தண்ணீருக்குள் வியர்த்திருந்தேனா என்று ஞாபகம் இல்ல. ஒரு வழியா அந்தப் பாறையின் விளிம்பு தென்பட்டது. அதப் புடிச்சுக் கிட்டு ஒரு அஞ்சு நிமிஷம் தொங்கிக் கொண்டிருந்தேன். அதிர்ச்சியிலிருந்து மீள அவ்வளவு நேரம் ஆச்சு. நண்பர்கள் எல்லாம், 'போறுண்டா சீனு காமிச்சது. எழுந்து வாடா' என்றார்கள். ஒரு வழியா பாறை மீது ஏறி, இந்தப் பக்கம் மெதுவா கால் பதிக்...உடனே தரை. என்னடா ஒரு கொடுமை. இந்தப் பக்கம் ஆழாக்கு ஆழம். அந்தப் பக்கம் உண்மையிலேயே மடு. இப்ப நினைச்சாலும் இலேசா ஒரு பயப்பந்து வயத்துக்குள்ள சுருட்டிக் கொள்வது உணர முடியும்.


மரண நினைவு வந்தது உண்மை. ஆனால் கட்டுக்கடங்காத பயம் இல்லை. 'இதோ பாரு, உனக்குக் கொஞ்சம் நீச்சல் தெரியும்; ஒரு முறையாவது தண்ணீர் உன்ன மேல கொண்டு வரும். அப்போ எதையாவது பிடித்துக்கொண்டு சமாளிக்கலாம்' என்ற தொனியில் தலையிலிருந்து (மூளை என்றால் கோபிப்பீர்கள்) ஒரு ஆறுதல் அறிவுரை கிடைத்தது இப்பவும் ஞாபகம் இருக்கு.

நான் நீச்சல் கற்றுக் கொண்டது ரொம்பவே லேட். கல்லூரி முடித்து, வேலைக்குப் போக ஆரம்பித்த பின், சும்மா குளிக்கப் போகலாம்னு நண்பர்களுடன் ஒரு ஏரிக்குப் போகத் துவங்கி, யாரும் கற்றுக் கொடுக்காமல் நானாகவே தட்டுத் தடுமாறி நீந்தத் துவங்கினேன். இப்பவும் அதே நிலைதான். என்ன, ஒண்ணுமே தெரியாதவங்க உடனே மூழ்கினால், எனக்கு ஒரு ஐந்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் அது நடக்கலாம் :).

நங்கநல்லூர்-மடிப்பாக்கம் ஏரிகள் எல்லாவற்றிலும் நான் கிரிக்கெட் விளையாடி இருக்கேன். அவைகள் அனைத்தும் இப்போ அடுக்கு மாடிக் குடியிருப்புகள். சில பிரசித்தி பெற்று பெரிய கோவில்களாகிவிட்டன. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் மைதானத்தில் நான் மொத்தம் நூற்றுப் பதினைந்து விக்கெட்கள் எடுத்திருப்பேன் என்பது வெண்ணை, வடையுடன் காட்சி தரும் அவருக்கு நிச்சயம் தெரியும்.

நான் நீச்சல் பயின்ற ஏரி - மேடவாக்கம் சாலையில் பிரிந்து வலப்பக்கம் செல்லும் குறுகிய சாலை, ஒற்றையடிப் பாதையாக ஒரு மர்மதேசத்தில் முடிந்து, ஒரு மேடு ஏறினால் ... ஒரு அழகிய ஏரி. யாருக்கும் அவ்வளவாகத் தெரியாத ஒரு ஏரி. மொத்தப் பிரதேசமே ரம்மியமா இருக்கும். சில எருமைகள், தாமரைப் பூக்கள், பனை மரங்கள், வயல்வெளி, அதைத் தாண்டி மலைகள் என்று உண்மையிலேயே அழகாக இருக்கும். இப்போ எப்படியோ! யாராவது பெருந்தனக்காரர் முதலில் பார்ம் ஹௌஸ், பின்பு வீட்டு மனைகள் என்று பணம் பண்ணியிருக்கலாம்.

சிறு வயதில் பெரியப்பாவின் ஊருக்குச் சென்ற ஞாபகங்களும் இருக்கு. பட்டுக்கோட்டை-பேராவூரணி சாலையில் ஏதோ ஒரு இடத்தில் பிரிந்து உள்செல்ல வேண்டிய ஒரு குக்கிராமம். நகர்ப்புறங்களில் ஏரி என்று சொல்வதை அங்கு கம்மாய் (கண்மாய்) என்பார்கள். என் அண்ணன் சுப்புரமணி இலாவகமாக எருமை முதுகில் ஏறி, நீச்சல் அடிப்பதைப் பார்ப்பதும், கொண்டு சென்றிருந்த சொம்பில் நீர் முகந்து குளிப்பதும் என் வேலை. இப்போ அண்ணன் (பெரியப்பா மகன்) ஆடிட்டராக மதுரையோ, சென்னையோ, நியூ ஜெர்சியோ எங்கேயோ அட்டகாசமாக இருப்பதாகக் கேள்வி. காலம் எப்படி எல்லோரையும் புரட்டிப் போட்டுக்கொண்டே போகிறது. கடவுள் ஒரு சான்ஸ் கொடுத்தால், நிச்சயம் நானும் சுப்பிரமணி அண்ணனும் சொக்காய் போடாத, வெறும் கால்சராயுடன், கம்மாயிலும், மாந்தோப்பிலும் சுற்றியலைந்த நாட்களுக்குக் கேள்வி கேட்காமல் போய் விடுவோம். எல்லோருமே அப்படிதான் என்று நினைக்கிறேன்.

சரி வேற மேட்டர் இல்லையா, ஒரே ஆறு, ஏரி என்று சுற்றிக்கொண்டே இருக்கிறாய் என்பவர்களுக்கு : இல்ல, நிஜமாவே வேற மேட்டர் இல்ல. மேலும், நண்பர் வாசு (அகநாழிகை) ஒரு பதிவில் 'எதுக்கு இவ்வலோவ் மேட்டர்' என்று கேட்டிருந்தார். அத்துடன், பதிவு ஏரிகள் பற்றியது என்பதால், மதுராந்தகத்தாருக்கு மரியாதை அளிப்பது தானே முறை?

படித்த, பிடித்த கவிதை:


விலை நிலம்

பக்கத்து நிலமும்
ஒருகாலத்தில் என்னைபோலவே
வனமாகத்தானிருந்தது

பொறுப்புள்ள ஒருவனின்
உடைமையானதும்
கொஞ்ச நாள் நெல்
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் நிலக்கடலை
விளைவிக்கிறது.

கொஞ்சநாள் சூரியகாந்திப்பூக்களை
விளைவிக்கிறது.


கொஞ்சநாள்
ஓய்வாக இருக்கிறது

தண்டவாளம் சுமந்துகிடக்கும்
என்மீது எப்போதும்
மூச்சிரைத்தபடியும்
இளைப்பாறியபடியும்

தடதடத்து ஊர்கின்றன ...

விதவிதமாய் ரயில்கள்

கழிவுகளைத் துப்பியபடி



எழுதியது என் இனிய நண்பன், வேலன் அண்ணாச்சியின் ஆதர்ச கவிஞன் முத்துவேல். இந்தக் கவிதையின் முழுப் பரிமாணம் புரிய அவர் தளத்துக்குச் சென்று, இந்தக் கவிதையைத் தேடிப் பிடித்து, கூட இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் விளங்கும்.

லிங்க் எங்கே என்கிறீர்களா? கொடுப்பதாக இல்லை. மூன்று காரணங்கள்.

1. நல்ல கவிதை படிக்க சற்று மெனக்கெடலாம். தப்பு இல்லை.

2. நிச்சயம் பின்னூட்டத்தில் வேலன் கொடுத்து விடுவார். (பின்னூட்டத்தில் லிங்க் எப்படிக் கொடுப்பது என்பது இன்னும் எனக்குப் பிடிபடவில்லை)

3. லிங்க் கொடுத்தால், உடனே கிளிக் செய்வீர்கள். அவர் கவிதையில் மூழ்குவீர்கள். அப்புறம் பின்னூட்டம் யார் போடுவார்கள்?

Wednesday, April 15, 2009

பிக் பாக்கெட்


பர்சைத் தொலைத்திருந்தார் சங்கரன். அவர் பொதுவாக காரில் போகும் நபர். இன்று வண்டி திடீரென்று சப்பையான தனது வலது முன்பக்கச் சக்கரத்தைக் காட்டி 'சாரி பா' என்றது. ஸ்டெப்னி மாற்ற நேரம் இல்லாததால், ஆட்டோவைத் தேடினார். ஐந்து நிமிடங்களாகப் பிடி கொடுக்காத ஆட்டோக்களால் வெறுத்துப் போய், மூன்று வருடங்களில் முதன் முறையாக மாநகராட்சிப் பேருந்தில், நெரிசலில் பயணித்தார்.

அப்படி ஒண்ணும் சிரமமாக இல்லை. எத்தனை பேர்! எத்தனை முகங்கள்! ஒவ்வொன்றிலும் கவலை, மகிழ்ச்சி, ஆர்வம், சோர்வு என பலவகை உணர்ச்சிகளுடன் முகங்கள்! டிக்கெட் வாங்கிக்கொண்டு ஒரு பொறுப்புள்ள, கண்ணியமான குடிமகனின் இலட்சணங்களுடன் ஓட்டுனர் இருந்த திசையில் முன்னேறிக் கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை தாண்டி, நந்தனத்தை நெருங்கியது பஸ். என்னவோ சொல்லமுடியாத உணர்ச்சி திடீரென்று. அனிச்சையாகப் பான்ட் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தார். ஆ, பர்ஸ் காணோம். சுற்று முற்றும் பார்த்ததில், அருகில் இருந்தவன் கையில் என்னவோ இருந்தது. நழுவி அவன் பின்னால் சென்றதைப் பார்த்து விட்டார். உடனே, சப்தமாக 'பிக் பாக்கெட் பிக் பாக்கெட்' என்று கூவி, ஒரு அதிர்ச்சி உண்டாக்கினார்.

பஸ் நிறுத்தப்பட்டது. அவர் காட்டியதன் பேரில் அந்த பிக் பாக்கெட் பிடிக்கப் பட்டான். போலிஸ் அழைக்கப்பட வேண்டும் என்று பொதுக்கருத்து நிலவியது. ஆனாலும் எல்லோருக்கும் ஆபிஸ், ஆசுபத்திரி என்று சொந்த அவசரங்கள்.

உடனே யாரோ இரு இளைஞர்கள் துவங்கி வைக்க, அந்தத் திருடனுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது. அவன் வாயில் இரத்தம் கசிந்தது. அவனிடம் துழாவிப் பார்த்தார்கள். பர்சின் சுவடே இல்லை. வெறும் இரண்டு ருபாய் நாணயம் சட்டைப்பையில் இருந்தது.

"இவனுங்கள நம்பக்கூடாது சார். ஒரு ரெண்டு, மூணு பேரா வருவானுங்க. சும்மா பாஸ்டா பாஸ் பண்ணுவாங்க."

"ஆமாடா, ஒத்தன் எடுப்பான், உடனே இன்னொருத்தன் கிட்ட பாஸ் பண்ணி, அவன் மூணாவது இப்பிடி போயிடும்"

"இப்பிடித்தான் ஒரு தடவ, பஸ்லேந்து ஜன்னல் வழியா தூக்கிப்போட்டான். அத கரீட்டா இவன் சகா வந்து காட்ச் புடிச்சிகினு போயிடாம்பா"

கண்டக்டர் சங்கரனிடம் "சார், எல்லாருக்கும் லேட் ஆகுது. வண்டிய போலிஸ் ஸ்டேசனுக்கு விடுவோம். அப்புறம் நீங்க பாத்துக்கோங்க" என்றார்.

அதற்குள் பிக் பாக்கெட் ஆசாமியின் சட்டை பெரும்பாலும் கிழிந்து போயிருந்தது. ஒரு மாதிரி கைகால்களை மடக்கி உட்கார்ந்திருந்தான். தலைமேல் அடி விழாதபடி கைகளால் மூடிக் கொண்டான்.

சங்கரன் முன்பு அம்பத்தூரில் குடியிருந்தபோது பக்கத்து வீடு போலிஸ் ஸ்டேஷன். ஒவ்வொரு இரவும் குற்றவாளிகளின் அலறல் காதை அறையும். பகல் நேரங்களில், காவலர்கள் உள்ளே நுழைகையில், சிறு திருடர்களை ஏதோ நொறுக்குத் தீனி உண்பது போல் ஒரு தள்ளு தள்ளி பூட்ஸ் காலால் மிதிப்பதை நிறைய முறை பார்த்திருக்கிறார். தேவைக்கு அதிகமாக போலிஸ்காரர்கள் அடிப்பதாகவே இவருக்குத் தோன்றும். ஒரு மாதிரி சிறு குற்றவாளிகளின் மேல் பொதுப் பரிதாபம் இவருக்கு வழிந்து ஓடும்.

இப்போதும் பர்ஸ் பறிபோன கோபம், வருத்தம் எல்லாம் காணாமல் போய், உடலைக் குறுக்கி, சாலை ஓரமாய், இரத்தம் வழிய உட்கார்ந்து இருந்தவனிடம் பரிதாபம் மேலோங்கி நின்றது. ஒரு முடிவு எடுத்தவராக, செல் போனைக் காதில் வைத்துக்கொண்டார். பிறகு குரலை உயர்த்தி, 'சார், சாரி, பர்சு வீட்டுல வெச்சுட்டேன். இப்பதான் போன் வந்தது' என்று பொதுவாகச் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு இலேசான திட்டு, நிறைய அறிவுரை என்று பொதுஜனம் இவர் மேல் கக்கிய விஷயங்கள் அவ்வளவு முக்கியமில்லை.

எல்லோரும் போன பின்னும், அவன் அங்கேயே தலை குனிந்து இருந்தான்.

"நீ தா எடுத்தன்னு தெரியும். உனக்கு விழுற அடி பாக்க முடியல; அதான். பர்ஸ் எங்கே?'

அவன் ஒண்ணும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் சும்மா இருந்த அவனால் இலேசாக எரிச்சல் அடைந்த அவர் "எனக்குத் தேவையான சில விஷயங்கள் பர்சில் இருக்கு. பணத்த விட்டுட்டு அதையாச்சும் கொடுத்திடு" என்றார்.

அவன் ஒண்ணும் பேசவில்லை. பிறகு திடீரென்று எழுந்து, இவரைப் பார்த்தான். வேகமாக நடக்க ஆரம்பித்தான். முட்டாள்தனமாக இருந்தாலும் சங்கரனும் தொடர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து அவன் "சார், சாயங்காலம் தரேன். உங்க அட்ரஸ் தாங்க" என்றான்.

"பர்சில் வீட்டு அட்ரஸ், போட்டோ எல்லாம் இருக்கு. இருந்தாலும், இதுதான் என் செல் நம்பர். அட்ரஸ் தெரியலேனா கூப்பிடு"

அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நல்ல வேளையாக செல் போன் இருந்தது. ஒரு ஆட்டோ (இப்போ கிடைக்குது!) பிடித்து நண்பன் ஆபிசுக்குப் போய் சேர்ந்தார்.

சாயங்காலம் ஏழு மணிக்கு வாசலில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். நிழலாட, நிமிர்ந்து பார்த்தார். அவனேதான். தயங்கித் தயங்கி வந்தான். அவரிடம் பர்சை நீட்டினான். வாங்கிப் பார்த்தார். பணம் அப்படியே இருந்தது. மற்ற குப்பைகளும்.

"என்ன பணம் எடுத்துக்கலையா?"

"வேணாம் சார்"

"என் இப்பிடி ஒரு தொழில் பண்ணுற?"

' "

"உன்னத்தான் கேக்குறேன்"

"அது அப்புடித்தான் சார்; மாத்த முடியாது இனிமே"

"அதா ஏன்னு கேக்குறேன்"

"படிப்பும் இல்ல. வேற வேலையும் கெடைக்காது"

"உனக்கு என்ன வேல தெரியும்"

"சார், டிரைவிங் தெரியும் சார்"

"சம்பளம் நாலாயிரமோ, அஞ்சாயிரமோ கிடைக்கும். ஆமா, இதுல உனக்கு எவ்வளவு தேறும் மாசத்துக்கு?"

"மாமூல் போக, ஒரு பதினஞ்சு-இருபது வரும் சார். ஆனா நெறைய அடி ஒத திங்கணும் சார்"

"ம்ம்"

"அதோட மனுஷாலு நம்மள மதிக்க மாட்டாங்க - ஆனா பலகிடிச்சி"

கொஞ்ச நேர மௌனம். பிறகு அவனே தயங்கி அவரிடம் கேட்டன்.

"சார், நீங்க ஒரு டிரைவர் வேல போட்டுத் தரீங்களா?"

அவருக்கு அவன் மேல் உடனே ஒரு பச்சாதாபம் எழுந்தது. கிளர்ச்சியாக உணர்ந்தார். சமுதாயத்தில் ஒருவனையாவது திருத்தப்போகும் சாத்தியக்கூறு அவருக்கு கொஞ்சம் பரபரப்பைத் தந்தது. ஆனாலும், பெரிய மனிதர்களுக்கே உரிய, பல நூற்றாண்டுகளாக உட்புதைந்த, ஜாக்கிரதை உணர்வு "ம்ம், ரெண்டு நாள் கழிச்சு வா, பார்க்கலாம்" என்று சொல்ல வைத்தது.

இரண்டு நாட்களில் யோசிக்க யோசிக்க, உயர் இலட்சியங்கள் எனும் மெழுகுப் பொம்மையை நடைமுறை வாழ்க்கை என்னும் சுடர் உருக்கிக் கொண்டிருந்தது.

மூன்றாம் நாள் காலையில் வந்த அவனிடம் 'இப்போதைக்கு இல்லப்பா. பின்னாடி இருந்தா சொல்லுறேன். இப்ப இருக்குற ரெசஷன் டயத்துல கார் வேணாம்னு பாக்குறேன்' என்று முடித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் நிலத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிர்ந்த போது நிச்சயமாக ஈரமான கண்களைப் பார்த்தது உண்மை. சுதாரித்துக் கொண்டான். முள்ளும் மலரும் ரஜினி பார்த்திருப்பீர்களே. அதனை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அதே போல இலேசாக தலையைச் சாய்த்து 'பரவாயில்ல சார்' என்றான். நிச்சயமாக அவன் கண்களில் இப்போது இவரைப் பார்த்து பரிதாபம் இருந்தது. மெல்ல நடந்து மறைந்தான்.

'பாவந்தான்; ஆனா எப்பவும் மடில நெருப்பக் கட்டிகிட்ட மாதிரியில்ல இருக்கணும்"

"ஏதாவது காணாம போச்சுன்னா, பாவம் அவனத்தான சந்தேகப் படுவோம்?"

"இப்போ, கஷ்டமோ நஷ்டமோ, பதினஞ்சு-இருவதுன்னு சம்பாரிக்குறான்; அஞ்சாயிரம் சம்பளம் எப்படிப் பத்தும் அவனுக்கு?"

இப்படியெல்லாம் சால்ஜாப்புகள் அவரைச் சுற்றி வந்தன ஒரு வாரத்திற்கு.

பிறிதொரு நாள் சிக்னலில் காத்திருக்கையில், ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் இருந்து இலாவகமாக, பெருமிதமாக இறங்கியவனைப் பார்த்தார். குற்ற உணர்ச்சி, எத்தனை சால்ஜாப்பு செய்தும் போகவில்லை. மனசாட்சி பின்குறிப்பாக 'நீ அவன் பெயரைக் கூட கேட்கவில்லையே' என்றும் உப கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.



(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆனது)

Saturday, April 11, 2009

மும்பை, மதுரை - (எதை) பற்றியும் பற்றாமலும் .... (11th April '09)


பம்பாயில் மக்கள் எப்போதும் வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள்: வாக்களிக்க, ஒரு பிளாட்டை அடைய, ஒரு வேலை கிடைக்க, நாட்டை விட்டு வெளியேற, ரயில்வே முன்பதிவு செய்ய, ஒரு போன் பண்ண, கழிவறை செல்ல. நீங்கள் வரிசையில் முன்னேறி ஒருவழியாக முதலிடத்தில் நிற்கும் தருணத்தில், உங்களுக்குப் பின் நின்று கொண்டிருக்கும் நூறு, ஆயிரம், கோடி பேர்களுக்கு அசௌகரியம் தருவதாக நீங்கள் நினைவுறுத்தப் படுவீர்கள் - 'சீக்கிரம், சீக்கிரம் - உன் வேலைய முடிப்பா'

நீங்கள் இரண்டாவதாக நிற்பவராக இருந்தால், முதலில் நிற்பவருக்குப் பின்னால் ஒருபோதும் நிற்கக்கூடாது; அவருக்குப் பக்கத்தில் தான் நிற்க வேண்டும் - ஏதோ அவருடனே இருப்பவர் போல. அப்போதுதான், அவர் நகரும் போதே, ஒரு இலாவகமான பக்கவாட்டு எட்டில் நீங்கள் முதலிடத்தைப் பிடிக்க முடியும்.

*********************

தண்ணீர் கிடைக்காத, கழிவறை இல்லாத சேரியில் வசிக்கும் ஒருவன் தான் இங்கு வந்திருப்பதன் காரணங்களை விவரிக்கிறான் - 'பம்பாய் ஒரு தங்கப் பறவை'. அதே சமயம் ஒபெராய் ஹோட்டலின் பே வியு பாரில் உட்கார்ந்து கொண்டு மும்பைவாசியின் சராசரி ஆண்டு வருமானத்தைபோல் ஒன்றரை மடங்கு விலையில் Dom P'erignon பாட்டில் ஒன்றை ஆர்டர் செய்யவும் முடியும்.

இன்னொருவர் இந்த நகரத்தை வேறு விதமாக வர்ணிக்கிறார் "இங்கு யாரும் பசியால் சாவதில்லை". முற்றிலும் உண்மைதான். இந்தியாவின் மற்ற இடங்களில் இன்னமும் பலர் பசியில் இறக்கையில், மும்பையில் 'ஒல்லியாவதற்கான' வைத்திய சாலைகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. எல்லாத் தட்டு மக்களிலும் 'ஒல்லியாக' முயற்சிக்கும் மக்கள் 'பருமனாக' முயற்சிப்பவர்களை விட மிக அதிகமாக இருக்கிறார்கள்.

[சுகேது மேத்தா எழுதியிருக்கும் 'மாக்சிமம் சிடி' படிக்கத் துவங்கி இருக்கிறேன். (ஆமாம், இப்போது தான் படிக்கிறேன்). அவ்வப்போது இப்படி அவிழ்த்து விடுவேன்.]

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

'இன்று மதுரையில் திராவிட இயக்கப் பவளவிழா. ஒலி பெருக்கி நெரிசலில் முழு மதுரையும் நசுங்கிப் போய் இருக்கிறது. "இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா" என்று உச்சி வெய்யிலில் கத்திக் கொண்டு போகிறார்கள். இவர்களுடைய பெண்டாட்டி பிள்ளைகள் அவரவர்கள் இடத்தில் எப்படி இருக்கிறார்களோ! ஒருவேளை இரண்டு நாள் நிம்மதியாகக் கூட அவர்கள் இருக்கலாம்'

பரிசலின் அன்பை என்னவென்று சொல்வது! அவர் பதிவில் குறிப்பிட்டபடி நெசமாலுமே ஒரு புத்தகம் வந்தது. ஆனால் அவர் சொன்ன 'கல்யாண்ஜியின் கடிதங்கள்' இல்லை. 'வண்ணதாசன் கடிதங்கள்' என்று இருந்தது. சரி, இவ்வளவு கஷ்டப் பட்டு அனுப்பியவருக்கு ஒரு போன் போட்டு 'புக் வந்துது...ஆனா ..' என்று விவரித்தேன். அந்தப் பக்கம் இரண்டு சப்தங்கள் கேட்டது. ஒரு கை தலையில் அடித்துக் கொள்வதையும், சில பற்கள் மற்ற சில பற்களோடு சண்டையிடுவதையும். ஒரு வேளை கோவமா இருக்குமோ என்று சந்தேகம் வந்ததால் லைன கட் செய்து விட்டேன். அந்த பயத்தில் பரிசல் கொடுத்த 'அரச கட்டளையைச்' செவ்வனே செய்து முடித்த செல்வாவுக்குப் போன் போடும் உத்தேசத்தையும் தள்ளிப்போட்டு விட்டேன்.

உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல. மேலே உள்ள மதுரை பற்றிய வரிகள் வண்ணதாசனின் கடிதங்களில் இருந்து எடுத்தவை. இன்று பரிசலிடம் பேசும்போது 'உரைநடையில் கவிதை வடிவம் இருப்பதைப் படித்தது முதன்முதல் கல்யாண்ஜியிடம்தான்' என்றார். மறுக்க முடியாது என்பது கீழ் காணும் வரிகளில் புரியும்.

'நாம் விபத்துக்குள்ளாகி இருக்கிறோம். எக்கிய என் முதுகு வளைவுக்குக் கீழ் பிசுபிசுத்து ஓடுகிற ரத்தம் யாருடையது என்று தெரியவில்லை. சற்று முன்பு வரை நான் விரல் கோர்த்து உதட்டில் ஒற்றி முத்திய மனுஷியின் கை பிய்ந்து சிதறி வாசலோரம் நிறுத்தப்பட்டிருக்கிற இரண்டு சக்கர வாகனத்தின் பின் பைதாக் கம்பிகளில் செருகி இருக்கிறது. பூந்தொட்டியின் உடைசலுடன் சரிந்திருக்கிற செடியில் காக்கிச் சட்டைக் கிழிசலும், உத்தியோகப் பித்தளை வில்லையும். சாக்லேட் நிற இசைநாடா, ஒரு சிக்கலான தாவரம் போல காற்றில் அலைந்து கொண்டு கிடக்கிறது. பூனைக்குட்டியின் குரல் கேட்கிறது. வெகு தொலைவில் ஜென்ம தூரத்துக்கு அப்பால் ஊரில் இருக்கிற 'பூனை ஆச்சி' வீடு ஞாபகமும், இடையில் உள்ள சுவருக்கு இந்தப் பக்கம் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிற தங்க அரளி மரமும் அந்தப் பூனைக்குட்டிக் குரலில் கசிகின்றன. என் மேல் மஞ்சள் நிறமான தங்க அரளிப் பூக்கள்.’

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சரி, நாமளும் 'வாசிப்பாளர்'தான்னு காண்பித்துக் கொண்டாயிற்று. அடுத்த ஐட்டம் சுரேஷ் கண்ணனின் 'எப்படி' பதிவு. அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார் இவ்வளவு எதிர்வினை வரும் என்று. சில காட்டமான பின்னூட்டங்கள். சில சாதகமான பின்னூட்டங்களைக் கலாய்த்து மேலும் சில பின்னூட்டங்கள் என்று ஒரே அல்லோல கல்லோலம் (சரிதானே வேலன்?). இந்தப் பதிவைக் கடுமையாகச் சாடிய இன்னொரு பிரபலத்தின் பதிவு. அங்கு எதிர்பார்த்தது போலவே நிறைய ஆதரவுக் குரல்கள்.

இந்தக் களேபரத்தில் எனக்குப் பூடகமாக இரண்டு குட்டுகள். ஒன்று நானும் அறிவு ஜீவியாக ஆசைப்படுபவன் என்ற ஐ.டி.கார்டு கிடைத்தது. இன்னொன்று 'யோவ், நான் கிராமர் மிஸ்டேக் பண்ணலாம். ஆனா அதை நீ சுட்டிக் காட்டுகிறாய். சுட்டிக் காட்டிய விடயம் தவறல்ல. சுட்டிக் காட்டும் மனோபாவம் வருத்தம் தருகிறது. நீ என்ன கடவுளா/பூசாரியா' என்னும் விதமாக ஒரு பின்னூட்டம். ம்ம், அவர் கருத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இனிமேல் யாராவது 'நண்பா, சந்திப் பிழை, வல்லினம் இல்லை, மெல்லினம்' என்ற ரேஞ்சில் பின்னூட்டம் போடுங்க ..... நானும் 'நன்றி நண்பா; மீண்டும் வருக' போட்டு விடுகிறேன் :)


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்த பரிதாபம் நம்ம சாலமன் (ஸ்பெல்லிங் சரிதானே) முத்தையா கடிதங்கள். இருவரையும் கூவம் நதியின் நடுவிலிருந்து யாரும் விடுவிக்காமல் மூச்சு முட்டி Asphyxiation இல் மரித்து விடுவார்களோ என்று அச்சமாக இருந்தது. ஒரு மூத்த பதிவரின் கடமையை செவ்வனே செய்த பரிசலுக்கு ஒரு நன்றி. அதிஷா எழுதியது நிச்சயமாக வேறு தளம். நன்றாகவே இருந்தது. ஆயினும் அந்தப் பதிவு ஒரு தொடரின் ஒரு பாகமாக இல்லாமல் தனிப் பதிவாக இருந்திருந்தால் one of his best pieces என்று நிச்சயம் உணர்ந்திருப்பேன். Somehow felt the post was not in keeping with the spirit of the meme.

சரி சச்சரவுகள் போதும். இனி... வேற என்ன தப்பிக்க முடியாது... கவிதை தான்.


குழந்தையின் வரிகள்


முதல் வரியிலிருந்து
ஒரு பட்டாம் பூச்சி பறந்தது

இரண்டாம் வரியில்
ஒளிர்ந்தது வானவில்

மூன்றாம் நான்காம் வரிகளில்
ஒரு மூங்கில் சாதூர்யத்துடன்
புல்லாங்குழல் இசைத்தது

ஐந்தாம் வரியின் மேல்
தூறல் நடனமிட்டது
இசையின் லயத்திற்கேற்ப

ஆறு ஏழு மற்றும் எட்டாம் வரிகளில்
மான்களின் ஓட்டமும்
மயில்களின் ஆட்டமும்
வனத்தின் பேச்சும்
காண கேட்கக் கிடைத்தன

ஒன்பதாம் வரியை
துடைத்து விட்டுப் போனது
ஒரு மேகம்

பத்தாம் வரியில்
ஒரு பெரியவர் சிதையூட்டப்பட்டு
எரிந்து கொண்டிருந்தார்

வரி பதினொன்றில்
பிறந்த குழந்தை
தான் எழுதிய இந்த கவிதையை
முதல் வரியிலிருந்து
வாசித்துப் பார்க்க
குழந்தைக்குப் பெயர் வைத்த
பட்டாம் பூச்சி
சுற்றிக் கொண்டிருந்தது
பெயரை சொல்லியபடி


கவிஞரைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

Tuesday, April 7, 2009

அரி முகங்கள்


போதையில் வீசியெறியப்பட்டு

மேசையில் சிதறியிருந்த 

பல்வேறு அறிமுகங்கள்

நாலைந்து வரிகளின் பின்

அடுக்கப்பட்ட பொய்கள்

ஒவ்வொரு அட்டைக்கும்

சொல்ல ஒரு கதை 

சுய அட்டைகளும்

பலப்பல மேசைகளில்

வீசியெறியப்பட்டு

காறி உமிழப்படலாமென்று

நினைவில் நிறுத்தியது

முகத்திலடித்த குளுநீர்

காலை புறப்படுமுன்

சட்டைப்பையில்

மூன்று அட்டைகள்

இன்றைய வேடங்கள்

அநேகமாய்

நண்பன், விசுவாசி

மற்றும் கனவான்

என்று இருக்கலாம்

('கீற்று' இதழில் பிரசுரம் ஆகியது)

Friday, April 3, 2009

சாலமன்-முத்தையா - (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (3rd April ‘09)

(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (3rd April ‘09)

சென்ற வாரம் கேட்க நேர்ந்த உரையாடல்கள்:

ஒரு ஞாயிறு காலை பாலாஜி மந்திரில் (நம்ம ஊரில் திருப்பதி சாமி) அபிஷேக வேளை

அம்மா: "அதோ பாரு, சாமி மேல எல்லோ கலர் தண்ணி'

பையன் : "எதுக்கு தண்ணி விடறாங்க"

அம்மா: "அது - அபிஷேகம்"

பையன் : "அப்ஷேகம்னா?"

அம்மா: "சாமி குளிக்கறாங்க"

பையன்: "ஆனா, சாமி இன்னும் டூத்த ப்ரஷ்ஷே பண்ணலியே"

அம்மா: “ “

மீண்டும் பையன் : "குளிச்ச அப்புறம்?"

அம்மா : "துடைச்சு விடுவாங்க - நா உனக்கு துடப்பேன்ல - அது மாதிரி"

பையன் : 'அப்புறம்"

அம்மா : "டிரஸ் பண்ணிப்பாரு சாமி"

பையன் : "அப்புறம்"

அம்மா : "மாலை எல்லாம் போட்டுப்பாரு"

பையன் : "அப்புறம்"

அம்மா : "எல்லோருக்கும் ஹலோ சொல்லுவாரு"

"எல்லோருக்கும் அருள் புரிவாரு" என்று சொல்லி மாட்டிக்கொள்ளாத அந்த அம்மாவின் சாதுரியம் முன் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்க வேண்டும்.
****************************************************************************************************
Thirumanjanam will be performed for Moolavar on Sunday, the 12th April 2009. All are invited and requested to participate.

थिरुमंजनाम विल बे पेर्फोर्मेद फॉर मूलावर ओं सन्डे , थे 12th अप्रैल 2009. अल अरे इन्वितेद एंड रेकुएस्तेद तो पर्तिसिपते.

இந்த மாதிரி இரு வரிகளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் தண்ணீரில் நனைத்த சாக் பீசால் கரும்பலகையில் ஒரு சேட்ஜி எழுதியது கவர்ந்தது. ஹிந்தியில் என்ன எழுதினார் என்று தெரியாது. 'மூலவர்' மற்றும் 'திருமஞ்சனம்' மட்டும் அப்படியே எழுதிவிட்டதாக அறிந்து கொண்டேன். சரி, இப்போ எப்பிடி ஹிந்தியில் எழுதினாய் என்றுதானே கேட்கிறீர்கள்? ஆங்கில வார்த்தைகளை ஹிந்தியில் transliterate செய்து விட்டேன், கூகிளாண்டவர் தயவில். என்ன மாதிரி வந்திருக்கிறதோ! ஹிந்தி தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லவும் :) பன்மொழி வித்தகனாகியதற்குப் பாராட்டப் போகும் உங்கள் அனைவருக்கும் எனது அட்வான்ஸ்டு நன்றிகள்.
****************************************************************************************************
அடுத்தது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மேல்மாடி விடுதி. இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு லிப்ட் வருகிறது. லிப்டுக்குள் ஒரு யுவதி. அருகில் அவள் கணவன்? அவன் மொபைலில் யாருடனோ.

லிப்ட் மூடும் தருவாயில் ஒரு ஆறு பேர் விடுதியிலிருந்து கீழே செல்ல வேண்டும். முதலாமவர் வந்து லிப்டைப் பிடித்துக் கொண்டு, தள்ளாடி வரும் தனது நண்பர்களுக்காகக் காத்திருக்கிறார். அந்த யுவதியும் பொறுமையாக பார்க்கிறாள்.

ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் ஓரளவு தமிழில்:

"ஹாய், ரொம்ம்ப நன்றி"

"பரவாயில்லை"

"உங்களுக்குச் சிரமம் இல்லை என்றால், தரைக்குச் செல்லும் பொத்தானை அமுக்குங்கள்"

"ஆயிற்று. அங்குதான் நாங்களும் செல்கிறோம்"

"ம்ம். சாரி, போதையிலிருக்கும் பாங்கர்களை (bankers) மன்னித்து விடுங்கள்"

"சட்டை செய்யாதீர்கள். பரவாயில்லை"

"இல்லை - நாங்கள் .கவலையை மறக்க இங்கு வந்தவர்கள் ... உங்களுக்குத் தெரியுமே .. உலகச் சந்தைகளின் சரிவும், வங்கிகளின் நிலையும்..."

"தெரியும்..எல்லாருமே அடி வாங்கிக் கொண்டுதான் இருகிறார்கள்"

"ஓ, நீங்களும் வங்கியாளரா?"

"இல்லை - அதில் டிபாசிட் போட்டவள்"

லிப்டு தரையைத் தொட்டிருந்தது.

"லேடீஸ் பர்ஸ்ட். நீங்க போங்க"

"இல்லை இல்லை - நீங்களே போங்க. நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இந்தக் கதவில் மோதிக்கொள்ளும் சாத்தியக் கூறுகள் அதிகம்"

"இது ரொம்ப ஓவர் மேடம். ஆனாலும் ...நன்றி"

இந்த சம்பாஷணையைக் குறும்பாக கவனித்துக் கொண்டிருந்த கணவரை நான் ரசித்தேன்.
****************************************************************************************************
சமீபத்தில் உருவாகியிருக்கும் சாலமன்-பாப்பையா சாரி சாலமன்-முத்தையா தொடர் படு சுவாரஸ்யமாக இருக்கு. மாதவ் ஒரு கௌதம் கம்பீர் என்றால், ஜ்யோவ், சேவாக் போல விளாசிவிட்டார். ரொம்ப நாட்களாக சரியாக ஆடாத டிராவிட் விளாசுவது போல பைத்தியக்காரனும் கொட்டி விட்டார். அந்தப் பதிவுக்கு நந்தாவின் பின்னூட்டம் மிகச் சரியாக இருந்தது. தொடரப் போவது நர்சிம். இலக்கியவியாதிகளிடம் இருந்து [ஆமாம், இவங்க மட்டும் எல்லோரையும் அரசியல் வியாதிகள், மித வியாதிகள், மத வியாதிகள் என்று எல்லோரையும் சாடலாம். இவங்கள மட்டும் மொக்கைவியாதிகள் ஆகிய நாம் ஏன் சும்மா விடணும் :) ] தொடர் ஒரு மித இலக்கியவாதிக்கு வந்திருக்கு. குருவி தலையில் என்று யாரும் நினைக்க வேண்டாம். நர்சிம் தொடர்ந்து நம் எல்லோருக்கும் 'இனிய அதிர்ச்சி' கொடுத்துக் கொண்டே இருப்பவர். சமீப 'பால் மிஷல் பூக்கோ’ ஒரு சோறு பதம்.

இது எவ்வாறு புரிந்து கொள்ளப் பட்டு இருக்கிறது என்பதிலேயே சிறு குழப்பம். மாதவ் எழுதியது ஒரு மாதிரி ஆட்டோகிராப். ஜ்யோவ் இலக்கிய/பதிவுலகு பற்றிய தன் எண்ணங்களை தன்னோட பாணியில் சொல்லி விட்டார். இவருக்கு இருக்கும் கோபத்தைப் பார்த்தால் 'முதன்மையாக "வாசகன்" ' என்பதை ஒரு கணேச, சாரி, பிள்ளையார் சுழியாகவே எடுத்துக் கொள்ளலாம் போல இருக்கு :)

பை.காரன் எழுதியது அவரே பகடி செய்வது போல் 'ஃபிலிம் காட்டுதல்' தோற்றம் இருந்தாலும், நீண்ட நாட்களுக்குப் பின் எழுதும் தோழனுக்கு கடிதம் இந்த வகையில் இருப்பது பொருத்தமே.

எனக்கென்னவோ இந்த meme யை ரொம்ப நீட்டாமல் விட்டு விடுவது மேல் என்று படுகிறது. நிச்சயம் ஒரு நிலையில் இது வேறு வகையான 'கொசுவத்தி' பதிவுகளாக மாறி, எல்லோருக்கும் கொட்டாவி வரப் போவது நிச்சயம். சினிமா பற்றிய meme ஒரு தருணத்தில் ஏற்படுத்திய ஆயாசம் அனைவரும் அறிந்ததே.

Having said that (இந்தப் பிரயோகம் இப்போது கை கொடுத்தாலும், அலுவலக கலந்துரையாடல்களில் மிகவும் நைந்து போன வாக்கியம்), இந்தத் தொடரில் அய்யனார், வளர்மதி, பெருந்தேவி, கென், தமிழ்நதி ஆகியோர் (எழுதினால்) என்ன எழுதுவார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
****************************************************************************************************
Lead India '09 என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு பிரச்சாரம் செய்து வருகிறது. கல்வி முறை, சுகாதாரத் துறை, மற்ற அரசுத் துறையில் ஊழல்கள் என்று பலவித இடங்களிலும் ஊடுருவி இருக்கும் சமூக அவலங்களை எதிர்த்து குடிமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணும் ஒரு செயல்பாடு என்று நினைக்கிறேன். நல்ல விஷயம்தான். ஆனால் புகைப் படங்களில் பெரியவர்கள் தங்கள் வீட்டு சிறார்கள் தலையில் கை வைத்து உறுதி பூணுவது போல் காணப் படுவது சற்று நெருடலாக இருக்கு. Any views?
****************************************************************************************************
இந்த வாரம் பிடித்த கவிதையில், உங்களுக்குப் பரிச்சயம் இருக்கக்கூடிய பெரிய கவிஞரின் இரு கவிதைகள்

தயங்கி தயங்கி

அம்மாவின் கை பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை.
சீராகப் போய்க் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது.

தனிமையின் விளிம்பு

கிண்ணத்தில் அளந்து
தட்டில் கவிழ்க்கப்பட்ட
அளவுச் சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.


இந்தக் கவிதைகளைப் பார்த்த பின் எனது கவிதை முயற்சிகளை ஒத்திப் போட்டு விட்டேன் :(. கவிஞர் யாரென்று கண்டு பிடியுங்கள்.