Friday, May 21, 2010

சா(ல்)மன் மீன்கள்

நகருக்குப் புறம் காட்டி
அன்பு செலுத்தும் காதலர்கள்
மற்றும்
காதல் செய்யும் அன்பர்கள்
வழிந்தோடும் காதலை
உள்வாங்கும் அலைகள்
காதலின் உத்வேகத்தில்
நிறம் மாறும் வானம்
முற்றிய காதல்
முழுதாய் வற்றியபின்
கடல் துறந்து
நகருள் நுழைந்து
நிரந்தரமாய் தொலையும்
சா(ல்)மன் மீன்கள்
புதிய காதலரின் அன்புக்கும்
அன்பர்களின் காதலுக்கும்
சில காதல் தோல்விகளுக்கும்
எப்போதும் தயாராக அலைகள்
அனைத்தையும் கண்காணிக்கும்
மௌனக் கண்ணாடியாக
வியாபித்திருக்கும் வானம்

(அகநாழிகை இதழில் பிரசுரம் ஆகியது)

Saturday, May 15, 2010

ஹாங்காங் பயணம்



கடந்த மார்ச் மாதம் சில நாட்கள் ஹாங்காங் சென்றிருந்தேன். முன்பே சென்றிருந்தாலும், தனியே அதுவும் வெளிநாட்டுப் பயணம் என்பதில் வரும் வழக்கமான அஜீரண உபாதைகள் ஒரு வாரம் முன்பே வரத் துவங்கியது. கனடாவில் இருந்து வரும் இரண்டு பெருசுகளுக்கு, வேறென்ன, மீண்டும் மீண்டும் பவர் பாயிண்ட் வித்தைதான். என்றைக்கு இதற்காகவே வெளியே துரத்தப் போகிறார்களோ !



பாஸ், பிசினஸ் கிளாஸ்.... என்றதும், 'என்னது? உன்னோட பவர் பாயிண்ட்ல உன்னோட சாதனைகள நீயே பார்க்கலையா? ஏதோ கள்ளத் தோணியில அனுப்பாம விமானத்தில் போவதே உனக்கெல்லாம் அதிகம்'னு துவங்கி அடுத்த பதினைந்து நிமிடங்கள் அன்பாக அர்ச்சனை செய்தார். 'சரி போறும், பி கேர்ஃபுல்' என்று என்னை நோக்கி ஆள்காட்டி விரல் காண்பித்து அவரை அடக்கி, ஐந்து மணிநேரப் பயணத்திற்கு தயார் ஆனேன்.




ஜெட் ஏர்வேஸ். வழமை நேர்த்தியில் ஜெட் ஏர்வேஸ் பெண்கள் (இந்த மாதிரி துவங்கும் ஒரு அருமையான கவிதை இருக்கிறது..விளம்பரங்கள் வேண்டாமென்று..மேலே சொல்லவில்லை). ஒரு சிக்கலும் இல்லாமல் ஹாங்காங் விமான நிலையம் சென்றடைந்தேன். சென்ற முறை பரிச்சயம் இல்லாததால் டாக்சியில் சென்று, எக்கச்சக்க செலவு செய்திருந்தேன். இம்முறை மெட்ரோவில் ஹாங்காங் ஸ்டேஷன் சென்று, அங்கிருந்து நான் தங்கும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்று விட்டேன். ஹாங்காங் மெட்ரோ பன்னிரண்டு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்கின்றன. நம்பவே முடியாத திறன். சுத்தம்.




என்ன, எல்லா பெயர்களும் 'ஹிங் வாங் யூங்' என்பது போலவே இருக்கிறது. என்னுடைய தென்னிந்திய உச்சரிப்பில், அவர்கள் ஆங்கில அறிவில் - அவர்களுடன் பேசுவதைவிட - ஞாயிற்றுக் கிழமை மதியம் தூர்தர்ஷனில் வருவது போல் சைகை மொழியில் பேசுவது சுலபம் என்ற முடிவுக்கு இரு சாராரும் வந்திருந்தோம். அவர்கள் சொல்லித்தான் தெரிந்தது -'இந்தியர்கள் சரி என்பதற்கும், முடியாது என்பதற்கும் பக்கவாட்டிலேயே தலையை அசைக்கிறார்கள்' என்று. அவர்கள் எல்லோரும் 'ஓகே, எஸ்' போன்ற நேர்மறைகளுக்கு மேலும் கீழும் என்றும், 'முடியாது, இல்லை' போன்ற எதிர்மறைகளுக்குப் பக்கவாட்டிலும் தலையாட்டுகிறார்கள். அவங்களுக்குள்ளும் ஏதோ ஒண்ணு இருக்கு பாரேன்.




நகரெங்கும் கேள்வி கேட்காமல் நாற்பது அல்லது அறுபது மாடி கட்டிடங்களை நட்டு விடுகிறார்கள். சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில், இது இன்னும் பெரிய நகரம் என்று தோன்றுகிறது. சிங்கை நிச்சயம் இன்னும் சுத்தமாக இருக்கிறது. மற்றபடி இந்த இரு நகர்-நாடுகளுக்கிடையில் நிறைய ஒற்றுமைகள். தாலாட்டுப் பாடும் தொனியில் கேட்டுக் கொண்டேயிருக்கும் மாண்டரின் மொழி. சில சமயம் கேண்டனீஸ். எங்கு பார்த்தாலும் கடல் உணவு மையங்கள். தண்ணீரில் எது மிதந்தாலும், நீந்தினாலும், கிடந்தாலும் பிடித்து வந்து பச்சையாகவோ, வறுத்தோ, மற்ற சித்திரவத்தைகள் செய்தோ நாவில் நீரொழுகச் சப்புக் கொட்டிக்கொண்டே இரண்டு குச்சிகளால் சாப்பிட்டுத் தள்ளுகிறார்கள். ஆனால், உபசரிப்பில், எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்பில் சீனர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்று சொல்லியதும், சமையல் கலைஞரிடம் சொல்லி கிட்டத்தட்ட நம்ம ஊர் கொழுக்கட்டை போல் (உள்ளே காய்கறிகள், பருப்பு என்று நினைக்கிறேன்) நிறைய செய்து 'என்ஜாய் மாடி' என்று மாண்டரினில் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று ஒழுங்காக தலையை மேலும் கீழும் ஆட்டினேன்.




சைனாவுடன் இணைந்தாலும், பொருளாதாரம், கலாசாரம், கல்வி போன்ற பல விஷயங்களில் பழைய தனித்தன்மையுடனே ஹாங்காங் இன்னமும் இருக்கிறது. நாமெல்லாம் தனி சுதந்திர நாடுகள் என்று நம்பும் தைவான், திபெத் போன்ற இடங்களைப் பற்றி துளியும் உணர்ச்சி வசப்படாமல், வீட்டிலுள்ள குறும்புக்கார சிறுவனைப் பற்றி பேசுவது போல் பேசுகிறார்கள். ரொம்ப பழம்பெருமை பேசுவதில்லை. ஒருவேளை மெயின் லேன்ட் சீனாவில் பேசுவார்களோ என்னவோ! ஹாங்காங் வாசிகளே தயக்கமின்றி ஒப்புக்கொள்ளும் விஷயம் - அடுத்த நூற்றாண்டின் நகரம் ஷாங்காய் என்று. அப்படி இருக்கிறதாம்.

நிறைய பேருக்கு ஆண்டனி சாங், அலெக்ஸ் சாய், ஜான் சாங் என்றெல்லாம் பெயர் இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. ஆங்கில, ஐரோப்பியர்கள் நிமித்தம் குழந்தை பிறந்த உடனேயே தன் ஊர்ப் பெயருடன் ஒரு கிருத்துவப் பெயரையும் முன்னால் போட்டுக் கொள்வதாக அறிந்தேன். ஆனால் நிறைய பேர் தேவாலயங்களுக்குச் செல்வதையும் கண்டேன். மற்றும் சிலர் Tao என்னும் மதம் தமது மதம் என்றார்கள். இந்தியாவில் ஏன் இத்தனை விடுமுறைகள் என்று எக்கச்சக்க வயிற்றெரிச்சலுடன் கேட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டாலும், எல்லா மதப் பண்டிகைகளுக்கும் எல்லோரும் விடுமுறை கேட்போம் என்றேன்.


 இரண்டு கனடா கனவான்களும் 'சரி ஏதோ சொல்ல வருகிறான். விட்டுப் பிடிப்போம்' என்று புரியாத ஆங்கிலத்தில் சொல்லி கை குலுக்கினார்கள். இந்த முறையும் தப்பிச்சிட்ட - எப்படிரா மாதவா என்று சொல்லியவாறே ஊரைப் பார்க்க மெட்ரோவைப் பிடித்தேன். திரும்பி வருகையில்தான் நிதானமாக ஹாங்காங் ஏர்போர்ட் வளாகத்தை நோட்டம் விட்டேன். பெரிய, நேர்த்தியான விமான நிலையம். குறிப்பிடும்படியான நிகழ்சிகள் ஏதுமின்றி ஊர் வந்து சேர்ந்தேன்.




மும்பை விமான நிலையம். அதற்கு அருகாமையில் ஒரு ஜோபட்பட்டி (நம்ம ஊரு சேரி). எங்கும் புழுதி, சாக்கடை, வாகனப் புகை, நெரிசல். ஆனாலும் நம் நாடு. slumdog என்றாலும் millionaire தான். மன்னிக்கவும். சேரிநாய் என்றாலும் கோடீஸ்வரன். சரியா ரானின் ?

Monday, May 10, 2010

அபயனுக்காக ஒரு கவிதை

கண்ணாமூச்சி

அவனுக்கும் அவளுக்கும்

கண்ணாமூச்சியில் அதிகப் பிரியம்
அங்காடியில் காணாமல் போனவளை
வைர மாலைக்குள் கண்டெடுக்கிறான்
வீட்டுக்குள்ளிருந்தே மாயமானவனை
அறுபத்தாறாம் பக்கத்திலிருந்தோ
நீள்சதுர கண்ணாடியின்
இருபது மூன்றாம் தடத்திலிருந்தோ
மீள் கொணர்வாள்.
ஒருமுறை அவள் ஒரு பாடலுக்குள்;
ஒருமுறை அவன் ஒரு ஆடலுக்குள்;
சில முறை அவள் ஒப்பனைக்குள்
பல முறை அவன் குறுந்தகடுக்குள்
நேற்று பார்த்தபோது
எதிரெதிரே நின்றாலும்
எதையோ தேடினார்கள்
கண்ணாமூச்சியைத்
தொலைத்து விட்டதாகத்
தெரிந்து கொள்ள முடிகிறது
இவனோ இவளோ
எதிர்பாராத இடத்தில்
கண்டுபிடிக்கப் பட்டார்களோ
என்ற பதட்டம் மெல்லப்
பரவுகிறது இப்போது

(அபயன் நன்றாக, வேகமாகச் சாப்பிடுவதற்காக எழுதியது. அபயன் யாரென்பது, அவன் தந்தை பின்னூட்டம் போடும் போது தெரிய வரலாம்)